January 30, 2017 தண்டோரா குழு
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஐரிஷ் மித்தனேர் 2௦16 பிரபஞ்ச அழகியாக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
2௦16ம் ஆண்டுக்கான ‘மிஸ் யுனிவர்ஸ்’ என்று அழைக்கப்படும் பிரபஞ்ச அழகிப் போட்டி பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் நடைபெற்றது. இப்போட்டியில் உலகின் 85 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர்.
அதில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 24 வயது ஐரிஷ் மித்தனேர் பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் வட பிரான்ஸ் நகர் லில்லே என்னும் இடத்தில் பிறந்தவர். பிரான்ஸ் நாட்டின் பிரபல பல் மருத்துவக் கல்லூரியில் பல் அறுவை சிகிச்சை குறித்து படித்து வருகிறார். அவருக்குத் தீவிர விளையாட்டு, உலக பயணம், மற்றும் புதிய பிரெஞ்சு உணவு தயாரித்தல் ஆகியவற்றில் ஆர்வம் உண்டு.
ஹைதி நாட்டை சேர்ந்த ரகீல் பெலிசியர் இரண்டாவது இடத்தையும் கொலம்பியா நாட்டை சேர்ந்த ஆண்ட்ரியா தோவர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
இந்த அழகி போட்டியில் முதல் 13 இடங்களை இந்தோனேசியா, மெக்ஸிகோ, பெரு, பனாமா, கொலம்பியா, பிலிப்பைன்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இடம் பிடித்தனர். ஆனால், இந்திய அழகி ரோஷ்மிதா ஹரிமுர்த்தி இடம் பெறவில்லை.
1994ம் ஆண்டு சுஷ்மிதா சென்னும் 2௦௦௦ம் ஆண்டு லாரா தத்தாவும் பிரபஞ்ச அழகியாக முடிசூட்டப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.