January 25, 2017 தண்டோரா குழு
பிரேசில் நாட்டில் 152 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடி விட்டனர். அவர்களில் 90 பேர் பிடிபட்டனர். தப்பித்து ஓடிய 60 பேரை ராணுவத்தினர் தேடி வருகின்றனர்.
இது குறித்து பிரேசில் சிறை அதிகாரி செய்தியாளர்களிடம் புதன்கிழமை (ஜனவரி 25) கூறியதாவது:
“பிரேசில் நாட்டின் சாவ் பாலோ மாகாணத்தில் பாயுரு என்ற இடத்தில் சிறைச்சாலை உள்ளது. அங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறைக் காவலர் ஒரு கைதியிடம் இருந்த கைபேசியைப் பறிமுதல் செய்ததையடுத்து கைதிகளுக்கும் சிறைக் காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிறையில் இருந்த 152 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். தப்பிச் செல்வதற்கு முன் சிறையின் ஒரு பகுதியில் நெருப்பு வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியை சிறை தீயணைப்பு வீரர்கள் அணைத்துவிட்டனர்.
தப்பிச் சென்ற 152 கைதிகளில் 9௦ பேரை ராணுவத்தினர் கைது செய்தனர். மீதம் 6௦ பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. சிறையில் நடந்த மோதலைச் சிறைக் காவலர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர்”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிரேசில் நாட்டில் இந்த ஆண்டு உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் நடந்த வன்முறையில் 12௦ பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.