March 4, 2017 தண்டோரா குழு
மக்களுக்குப் பாதுகாப்பு தருவது, தொலைந்த பொருள்களைக் கண்டுபிடித்துத் தருவது, போக்குவரத்தைச் சீர்செய்வது, திருடர்களைப் பிடித்து கைது செய்வது ஆகியவை காவல் துறையின் தலையாய கடமைகள் என்று கருதுகிறோம். ஆனால் சிலர் சிறு விலங்குகளுக்குக் கூட உதவி செய்வதில் அவர்கள் முன்னிலை வகிக்கிறார்கள்.
அதற்கு லண்டனில் நடந்த இந்தச் சம்பவம் ஒரு நல்ல உதாரணம்.
லண்டன் நகரின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹக்னே வீதியில் புதன்கிழமை (மார்ச் 1) ரோந்து சென்ற போது, சாலையில் விழுந்து கிடந்த ஒரு அணில் குட்டியைக் காவல் துறையினர் கண்டனர். அது பிறந்த சில நாட்களே ஆனது என்று அறிந்த அவர்கள், அதை எடுத்து அதன் தாயுடன் மீண்டும் சேர்த்துள்ளனர்.
“பொதுவாக ரோந்துகளில் இது போன்று கண்டுபிடிக்க முடியாது” என்று ஹக்னே காவல் துறையினர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில், மீட்பு புகைப்படங்களுடன் பதிவிட்டிருந்தனர்.
தாய் அணில் அதை மற்றோரிடத்திற்குக் கொண்டு செல்லும்போது அந்தக் குட்டி தவறிக் கீழே விழுந்திருக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், தாய் அணிலை ஹக்னே காவல்துறை அதிகாரிகள் எப்படி கண்டுபிடித்தனர் என்ற தகவலை வெளியிடவில்லை. இது குறித்த மேலும் சுவையான தகவலை அறிய ஊடகங்களும் ஆர்வம் காட்டுகின்றன.