March 17, 2017 தண்டோரா குழு
பல்லடம் அருகே பிளாஸ்டிக் கழிவுத் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. அதில், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சித்தம்பலம் பகுதியில் கண்ணன் என்பவருக்குச் சொந்தமான நூற்பாலை உள்ளது. அந்த ஆலையில் வட மாநிலத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அங்கு பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு செயற்கை நூல்கள் (சின்தடிக்) நூலகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
அங்கு வெள்ளிக்கிழமை காலையில் கழிவு பிளாஸ்டிக் பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியிலிருந்து திடீரென புகை மூட்டத்துடன் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.அதைக் கண்ட தொழிலாளர்கள் தீயணைப்புப் பிரிவுக்குத் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டனர்.
ஆனால், அவர்களால் தீயை உடனே கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. கரும் புகையுடன தீப்பற்றி எரிந்ததால் பல கிலோ மீட்டர் தூரத்துக்குப் புகை மூட்டம் காணப்பட்டது. சுமார் 5 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்தப் பெரும் தீ விபத்தை அணைக்க ஒரே ஒரு தீயணைப்பு வாகனத்தை மட்டும் தீயணைப்புப் பிரிவினர் பயன்படுத்தினர். இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்ட்டிக் கழிவு பொருட்கள் எரிந்து நாசமாயின. தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.