May 5, 2022 தண்டோரா குழு
பாரதியார் பல்கலை கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளை 40 ஆண்டு காலமாக ஆட்சியாளர்கள் ஏமாற்றி வருகின்றனர். இந்நிலையில் இழப்பீடு கொடு இல்லையேல் எங்கள் நிலத்தை எங்களுக்கே கொடு என்கிற முழக்கத்துடன் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் பாரதியார் பல்கலை கழகத்திற்குள் விவசாயிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு ஆயிரம் ஏக்கர் நிலத்தை விவசாயிகள் வழங்கினர். நிலத்தை வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு பல்கலை கழகத்திற்குள்ளேயே வேலை என்கிற உறுதி வழங்கப்பட்டது. நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு அரசு கொடுத்த உறுதியை எதையுமே நிறைவேற்றப்படவில்லை.
மேலும் ஒரு சென்ட் 2 ஆயிரம் ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இதனை எதிர்த்து விவசாயிகள் நீதிமன்றம் சென்றனர். இதனையடுத்து ஒரு சென்ட் 3 ஆயிரத்து 300 ரூபாய் என்கிற அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு வழங்கியது.
ஆனால் 30 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த பத்தாண்டுகலாக இருந்த அதிமுக அரசு கண்டுகொள்ளப்படாத நிலையில் தற்போதை தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்குவாம் என வாக்குறுதி அளித்திருந்தார்.
ஸ்டாலின் முதல்வராக பொருப்பேற்று ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை. இதுகுறித்து பலமுறை நினைவூட்டலை விவசாயிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் முறையிட்டும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதனையடுத்து நிலத்திற்கான இழப்பீடு கொடு அல்லது எங்களது நிலத்தை எங்களுக்கே கொடு என்கிற முழக்த்துடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பாரதியார் பல்கலையில் மே5 ஆம்தேதி குடியேறும் போராட்டத்தை அறிவித்தது.
இதனையடுத்து பல்கலை வாயில் முன்பு நூற்றுக்கணக்கான போலிசாரை குவித்து கைது செய்ய தயார் நிலையில் இருந்தனர். போலிசாரின் அச்சுறுத்தலையும் மீறி நூற்றுக்கணக்கான விவசாயிகள் பல்கலை கழகம் முன்பு திரண்டனர். இதனையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் விவசாயிகள் பல்கலை கழகத்திற்குள் நுழைய முயன்றனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்த வந்தார்.
இதனை ஏற்க மறுத்த பி.ஆர்.நடராஜன் எம்பி கோவை மாவட்ட ஆட்சியர் வரவேண்டும் அல்லது அவருக்கு இனையான அதிகாரிகள் வந்து உறுதிகொடுக்காமல் கலைய மாட்டோம் என்றார். இதனையடுத்து பி.ஆர்.நடராஜன் எம்பியை தொடர்பு கொண்டு பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உடனடியாக வருவாய் கோட்டாட்சியரை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளதாகவும், மாலை நேரிடையாக விவசாயிகளுடன் பேசி தீர்வை ஏற்படுத்த உறுதியளிப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து வருவாய் கோட்டாட்சியர் நேரில் வந்தார்.
ஆட்சியர் அலுவலகத்தில் மாலை பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வை எடுக்க மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.ஜூன் 15 ஆம்தேதிக்குள் இதற்கான தீர்வை ஏற்படுத்தாவிட்டால் மீண்டும் ஆடு, மாடுகளுடன் குடியேறும போரட்டத்தில் ஈடுபடுவோம் என கோட்டாட்சியரிடம் பி.ஆர்.நடராஜன் எம்பி எச்சரித்தார். மேலும் மாலை மாவட்ட ஆட்சியருடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்த கட்ட நகர்வுக்கு செல்வது என முடிவெடுக்கப்பட்டு தாற்காலிகமாக குடியேறும் போராட்டத்தை ஒத்திவைத்தனர்.
இதுகுறித்து பி.ஆர்.நடராஜன் எம்பி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
எம்ஜிஆர் பாரதியார் பல்கலைக்கழகம் நடத்துவதற்காக ஆயிரம் ஏக்கர் நிலம் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டது. அப்போதைய நேரத்தில் அரசு வழங்குவதாக கூறிய விலை குறைவாக உள்ளது என்றும் அதை அதிகரித்து தர வலியுறுத்தியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதற்கு தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.ஆனால் அதை விசாரிக்காமல் இன்று வரை காலம் தாழ்த்தி வருகிறது. ஆகவே தறபோது குடியேறும் போராட்டத்தை அறிவித்தோம்.இது அரசு நிலமோ, தனியார் நிலமோ அல்ல பல்கலை கழகம் இதுவரை உரிய பணம் தரவில்லை என்பதால் இது விவசாயிகளின் நிலம். ஆகவே தங்கள் சொந்த நிலத்தில் குடியேற உள்ளார்கள். உடனடியாக விவசாயிகளுக்கு சேரவேண்டிய பணத்தை தரவேண்டும்.
தற்போது மாவட்ட ஆட்சியர் இன்று பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வை எட்டலாம் என வாக்குறுதி அளித்துள்ளார். இதனையேற்று தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைக்கியோம். தீர்வு எட்டப்படவில்லை என்றால் ஆடு மாடுகளுடன் பாரதியார் பல்கலைக் பல்கலைக் கழகத்திற்குள் குடியேறும் போராட்டத்தை மீண்டும் நடத்துவோம் என்றார்.
முன்னதாக இந்த போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.பி.இளங்கோவன், செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, பொருளாளர் கே.தங்கவேல்,ஒன்றிய செயலாளர் காளப்பன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் கருப்பையா, வி.மணி, என்.ஆறுச்சாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.