May 5, 2022 தண்டோரா குழு
உலகெங்கிலும் உள்ள தாய் மற்றும் சேயின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மகப்பேறு செவிலியர்களை போற்றும் வண்ணமாக ஒவ்வொரு ஆண்டும் மே 5 ஆம் தேதி சர்வதேச மகப்பேறு செவிலியர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு,பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரி சார்பில் சர்வதேச மகப்பேறு செவிலியர் தின கருத்தரங்கு,செயல் முறை பயிற்சி மற்றும் விருது வழங்கும் விழா இன்று காலை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் அ.ஜெயசுதா வரவேற்றார்.
தொடர்ந்து பி.எஸ்.ஜி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்து,11 சிறந்த மகப்பேறு செவிலியர்கள் கார்த்திகா (அரசு மருத்துவமனை),ராஜேஸ்வரி (கிராமப்புற சுகாதார மையம்),ராஜாத்தி,ராமலட்சுமி, சத்யா, சரண்யா,ஷோபா (நகர்புற மகப்பேறு மையம்), நிர்மலா (இ. எல்.ஐ மருத்துவமனை) , சிவசங்கரி (ஜி.கே. என்.எம் மருத்துவமனை), அமுதவேணி ஸ்ரீ (ராமகிருஷ்ணா மருத்துவமனை), லில்லி புஸ்பம் (பி.எஸ்.ஜி மருத்துவமனை) ஆகியோருக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
பயிலரங்கில், மூன்றாம் நிலை பிரசவத்தின் மேலாண்மை முறைகளையும்,வெளிவரமுடியாத நஞ்சுக்கொடியின் மேலாண்மை,பிரசவத்திற்கு பின் வரும் அதிகப்படியான இரத்தப்போக்கை மேற்கொள்வதையும், கருப்பை சுருக்கத்திற்கான ஆரம்ப மேலாண்மை குறித்தும்,பெண் உறுப்பில் எற்படும் சிதைவுகளை சரிசெய்வதின் முறைகளையும், தாய்ப்பால் கொடுக்கும் முறையை பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 30 மகப்பேறு செவிலியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.இறுதியில் ஒருங்கிணைப்பாளர் பிரியா நன்றியுரை கூறினார்.