March 21, 2017 தண்டோரா குழு
நோக்கியா மொபைல் மாடல்களில் மிகவும் புகழ்பெற்ற மாடலாக கருத்தப் படுவது நோக்கியா 3310 ஆகும். 2000 முதல் 2005ம் ஆண்டுவரை இந்த மாடலானது உலகம் முழுவதும் உள்ள பல்வேறு வாடிக்கையாளர்களால் விரும்பி பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஒரு முறை சார்ஜ் செய்தால் குறைந்தது அடுத்த இரண்டு நாட்களுக்கு திரும்ப சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காத அளவிற்கு இதன் பேட்டரி அளவு இருக்கும். இதுமட்டுமின்றி எத்தனை முறை கீழே போட்டாலும் அல்லது கீழே விழுந்தாலும் அவ்வளது எளிதில் உடையாது.
இந்த மாடலில் குறுஞ்செய்தி அனுப்புவது மிகவும் எளிதாக இருந்த காரணத்தினால் எந்த நேரமும் குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டிருக்கும் காதலர்களுக்கும் நண்பர்களுக்கும் இது மிகுந்த உதவியாக இருந்தது.
இப்படிபட்ட பல நன்மைகளை கொண்டிருந்த நோக்கியா 3310 மொபைலானது ஸ்மார்ட் போனின் வருகையால் அதனுடைய புகழையையும் பெருமையையும் இழந்தது.
இந்நிலையில், தற்போது மீண்டும் நோக்கியா நிறுவனமானது நோக்கியா 3310 மொபைலை தயாரித்து சந்தையில் விற்க தயாராக உள்ளது. இதன் முதல் கட்டமாக வெளிநாடுகளில் இந்த மொபைலானது சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. நோக்கியா 3310 மொபைலானது 3500 ரூபாய்க்கு சந்தைகளில் விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோக்கியா 3310 என்னும் அடிப்படை வசதிகள் கொண்ட மொபைலை தவிர நோக்கியா-3,நோக்கியா-5 மற்றும் நோக்கியா-6 ஆகிய புதிய வடிவிலான ஸ்மார்ட் போன்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.