March 10, 2025
தண்டோரா குழு
கோவை லாலி ரோடு புனித வின்சென்ட் தே பவுல் சபை மற்றும் கோவை அரசு மருத்துவ இணைந்து நடத்திய தவக்கால இரத்த தான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.
கோவை லாலி ரோடு புனித அருளானந்தர் ஆலயத்தின் கிளை சபையான புனித வின்சென்ட் தே பவுல் சபை மற்றும் கோவை அரசு மருத்துவ இணைந்து தவக்கால இரத்த தான முகாம் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
முன்னதாக இரத்த தான முகாமை ஆலயத்தின் பங்குதந்தை அருட்பணி பால்ராஜ் துவங்கி வைத்தார்.இந்த நிகழ்வில் அருட் சகோதரிகள் மற்றும் உதவி பங்குத்தந்தை அருட்பணி சிபு கரோலின் மற்றும் புனித வின்சென்ட் தே பவுல் சபை தலைவர் ராஜேஷ்,உதவி தலைவர் பிரதாப், செயலாளர் சுகுணா மேரி,பொருளாளர் அருள்ராஜ்,உதவி செயலாளர் சகாயமுத்து, மற்றும் மூத்த உறுப்பினர்கள் சாமுவேல் ராஜ், ரவி ஆல்பிரெட் ஆகியோர் உடனிருந்தனர்.
இதில் புனித வின்சென்ட் தே பவுல் சபையின் செயல்பாடுகள் குறித்து ஆயர் பால்ராஜ் மற்றும் நிர்வாகிகள் கூறுகையில்,
கடந்த பல ஆண்டுகளாக இந்த சபையின் வாயிலாக பல்வேறு சமூக நல பணிகளை செய்து வருவதாகவும்,குறிப்பாக போதிய வருமானம் இல்லாமல் தவிக்கும் சுமார் பதினெட்டு குடும்பங்களை தத்து எடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருவதாகவும்,மேலும் மருத்துவம் மற்றும் கல்வி உதவி தொகை உதவிகளை தொடர்ந்து வழங்கி வருவதாக தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற தவக்கால இரத்ததான முகாமில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட ஆண்கள்,பெண்கள்,இளைஞர்கள் என ஏராளமானோர் இரத்த தானம் வழங்கியுள்ளதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் இரத்த தானம் வழங்கிய நன்கொடையாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.