November 23, 2024 தண்டோரா குழு
புரூக் பீல்ட்ஸ் நிறுவனத்தின் கார்பரேட் சமூக பொறுப்பு திட்டத்தில்,செயல்படும் சிறப்பு பயிற்சி மையம் வாயிலாக முன்னனி நிறுவனங்களில் பார்வையற்ற மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாக ஹெல்ப் தி ப்ளைண்ட் பவுண்டேஷன் அமைப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை புரூக்பீல்ட்ஸ் நிறுவனம் சார்பாக தொடர்ந்து பல்வேறு சமூக நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக இந்நிறுவனம் சி.எஸ்.ஆர்.எனும் கார்பரேட் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் ஹெல்ப் தி ப்ளைண்ட் பவுண்டேஷன் அமைப்புடன் இணைந்து பார்வையற்ற மாணவர்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
கடந்த ஐந்து வருடங்களாக இந்த திட்டத்தின் கீழ் பார்வையற்ற மாணவர்களின் தொழில் நுட்ப மேம்பாட்டு திறன் குறித்த பயிற்சியை வழங்கி வருகின்றனர்.
இத்திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட கணிணி மற்றும் ஆங்கில மொழி திறன் பயிற்சி காரணமாக பார்வையற்ற மாணவர்கள் பலர் முன்னனி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு புருக்பீல்ட்ஸ் நிறுவன அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் புரூக் பீல்ட்ஸ் நிறுவனத்தில் தலைமை செயல் அலுவலர் அஸ்வின் பாலசுப்ரமணியம் மற்றும் ஹெல்ப் த ப்ளைண்ட் பவுண்டேஷன் அமைப்பின் அறங்காவலர் நடராஜ் சங்கரன் மற்றும் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது கடந்த ஐந்து வருடங்களாக மதுரை மற்றும் கோவையில் பார்வையற்ற மாணவர்களின் நலன் கருதி,பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும்,
குறிப்பாக பார்வையற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு பயிற்சிகளால்,
பல்வேறு முன்னனி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் புருக்பீல்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் கோவை அரசு கலை கல்லூரியில் பார்வையற்ற மாணவர்களுக்கான சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் துவங்கி உள்ளதாகவும்,இதன் வாயிலாக பார்வையற்ற மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கி,அவர்களுக்கான வேலை வாய்ப்பை பெற்று வாழ்வியல் வெற்றிகளை பெற புரூக் பீல்ட்ஸ் நிறுவனம் உதவி புரிவதாக கூறினர்.