April 1, 2024 தண்டோரா குழு
கேஎம்சிஹெச் மருத்துவமனையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த புற்றுநோய் மருத்துவ மையமானது அதிநவீன வசதிகளுடன் புற்றுநோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ சேவைகள் அளிப்பதில் முன்னணியில் உள்ளது. இத்துறையில் ஏற்பட்டுவரும் நவீன முன்னேற்றங்கள் குறித்து மருத்துவர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டும் பொதுமக்கள் பலன்பெறும் வகையிலும் கருத்தரங்கு நிகழ்ச்சிகளையும் நடத்திவருகிறது.
அதன்படி கேஎம்சிஹெச் புற்றுநோய் சிகிச்சை துறையின் சார்பில் மார்ச் 30 மற்றும் 31 ஆகிய இரு நாட்களும் தேசிய அளவிலான கருத்தரங்கம் கோவை அவினாசி ரோட்டில் உள்ள லீமெரிடியன் ஹோட்டலில் நடைபெற்றது.
நாடு முழுவதிலும் இருந்து 150-க்கும் மேற்பட்ட புற்றுநோய் நிபுணர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் கடந்த வருடம் இத்துறையில் ஏற்பட்டுள்ள அதிநவீன முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.கருத்தரங்கின் போது கதிர்வீச்சு புற்றுநோய் மருத்துவம் குறித்த இணை நிகழ்வும் நடைபெற்றது.
நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் நடைபெற்ற வெபினாரில் மாணவர்களும் இளம் மருத்துவர்களும் பங்கேற்றனர். இதில் சர்வதேச நிபுணர்களும் கலந்துரையாடினர். ஆன்லைன் மூலமாக 200 பேர் பங்கேற்றனர். சுமார் 100 கதிர்வீச்சு மருத்துவ நிபுணர்களும் கலந்துகொண்டனர். மக்களின் வாழ்க்கைமுறை மாற்றம் காரணமாக அதிகரித்து வரும் குடல் புற்றுநோய் இதன் மையக் கருத்தாக அமைந்திருந்தது.
மார்ச் 31-ம் தேதி குழந்தைகள் புற்றுநோய் குறித்த ஒரு பிரத்யேக நிகழ்ச்சி நடைபெற்றது.இதனை கேஎம்சிஹெச் குழந்தைகள் புற்று நோய் மருத்துவர் டாக்டர் ருமேஷ் சந்தர் வழிநடத்தினார்.கேஎம்சிஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி கருத்தரங்கு பிரதிநிதிகளையும் விருந்தினர்களையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியின் போது உரை நிகழ்த்திய கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி நோயாளிகளின் துயர்நீக்க கேஎம்சிஹெச் ஒருங்கிணைந்த புற்றுநோய் மையம் எடுத்துவரும் முயற்சிகள் பற்றி எடுத்துரைத்தார்.நோயாளிகளுக்கு மேலும் சிறந்த சேவைகள் அளித்திட இதுபோன்ற கருத்தரங்குகள் மிகவும் பயனுள்ளாத இருக்கும் என்று அவர் கூறினார்.
கேஎம்சிஹெச் ஒருங்கிணைந்த புற்றுநோய் மையத்தின் மருத்துவர் குழுவைச் சேர்ந்த டாக்டர் பரத் ரங்கராஜன், டாக்டர் விக்னேஷ் கந்தகுமார், டாக்டர் ராம் அபினவ், டாக்டர் சுப்ரமணியம், டாக்டர் மது சாய்ராம் மற்றும் கே.எம்.சி.ஹெச் புற்றுநோய் மருத்துவர்களும் இந்த தேசிய அளவிலான கருத்தரங்கு சிறப்பாக நடைபெறத் தேவையான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.