September 4, 2017 தண்டோரா குழு
புளுவேல் கேம் விளையாடுவோர் மீது கடும் தண்டனை விதிக்க தமிழக டிஜிபிக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுவிட்டுள்ளது.
புளுவேல் கேம் விளையாட்டால் உலகம் முழுவதும் பலர் தற்கொலை செய்து வருகின்றனர். சமீபத்தில் மதுரையை சேர்ந்த ஒரு இளைஞரும் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் இன்று நடைபெற்ற விசாரணையில், தமிழகத்தில் Blue Whale விளையாட்டை பதிவிறக்கம் செய்ய முடியாது. அந்த விளையாட்டு தடை செய்யப்பட்டுவிட்டது என்றும் எனினும் இணையதளத்தில் புளுவேல் கேம் குறித்து பரப்பி வருகின்றனர் என்றும் சிபிசிஐடி தகவல் தெரிவித்தது.
இதையடுத்து, புளூவேல் கேமை ஷேர் இட், பேஸ்புக் மூலம் பகிர்ந்து கொண்டால் கடும் தண்டனை விதிக்க தமிழக டிஜிபிக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மேலும், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை வியாழக்கிழமைக்கு அறிக்கையாக தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.