October 16, 2017 தண்டோரா குழு
பெங்களூரில் திறந்த வாய்க்கால் வெள்ளத்தில் 16 வயது சிறுமி அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. ஆனால், இந்த ஆண்டு எப்பொழுதும் இல்லாத வகையில், அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக, பெங்களூர் நகரின் பல பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், பெங்களூர் மக்களின் வாழ்க்கை பல வகையில் பாதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் நகரின் பக்மனே டெக் பார்க் அருகே இருக்கும் சி.வி. ராமநகரை சேர்ந்த 16 வயது நரசிம்மா என்னும் சிறுமி, ஞாயிற்றுக்கிழமை காலைதிறந்த வாய்கால் அருகில் உள்ள கழிவறைக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பும்போது வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டார்.
இச்சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்த உள்ளூர்வாசிகள் அந்த சிறுமியை மீட்க முயன்றனர். வெள்ள நீர் அதிகமாக இருந்ததால், அந்த சிறுமியை மீட்க அவர்களால் முடியவில்லை. அந்த சிறுமியின் சடலத்தை சுமார் 400 மீட்டர் தூரத்தில் கண்டுபிடித்தனர்.
“திறந்த வாய்க்கால் பகுதியை சுற்றி, வேலி அமைக்க தவறிய ப்ருஹத் பெங்களூரூ மகாநகர அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்” என்று அந்த சிறுமியின் குடும்பத்தினர் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.