June 5, 2017
பெங்களூர் சிறையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்திக்க அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் இன்று சென்னையில் இருந்து பெங்களூரு புறப்பட்டார்.
இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான டிடிவி தினகரனுக்கு தில்லி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. சிறையில் இருந்து ஜாமீனில் வெளியான அவர் மீண்டும் கட்சிப் பதவியைத் தொடர்வேன். என்னை யாரும் நீக்கவில்லை. என்னை நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு மட்டுமே இருக்கிறது என்று பரபரப்பு பேட்டி அளித்தார்.
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை தினகரன் இன்று சந்திக்கவுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து பெங்களூரு புறப்பட்டுச் சென்றார். பிற்பகல் இச்சந்திப்பு நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்புக்கு பின்னர் டிடிவி தினகரன் எந்த மாதிரியான முடிவை எடுப்பார், மீண்டும் கட்சிப் பணியைத் தொடர்வாரா என்ற கேள்விகள் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளன.