December 21, 2021 தண்டோரா குழு
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு தான் அனைத்து பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் கோவை மாவட்ட வர்த்தக சங்கம் துவக்க விழா நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தும் போது எந்தவித ஏற்றமும் இருக்காது என்று மத்திய அரசு கூறிவிட்டு தற்போது காலணிகளுக்கு 5 முதல் 12 சதமாக வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதனை குறைக்க பிரதமருக்கும் மத்திய நிதியமைச்சருக்கு தொடர்ந்து கோரிக்கை மனு அனுப்பியும் எதுவும் நடக்கவில்லை எனவும் உயர்த்தப்பட்ட வரிவிதிப்பை உடனடியாக குறைக்க வேண்டும்.இல்லை என்றால் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.
தொடர்ந்து அரசு ஊழியர் மாநாட்டில் பல்வேறு சலுகைகள் அறிவித்த முதல்வருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தாமல் அனைத்து துறை அதிகாரிகள் வணிகர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். வணிகர்களை அச்சுறுத்தும் விதமாக அதிகாரிகள் செயல்பட கூடாது எனவும் ஜி.எஸ்.டி உயர்வை குறைக்க வலியுறுத்தி அனைத்து டெக்ஸ்டைல் சங்கங்களை ஒன்றிணைத்து முதல்வரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம் என தெரிவித்தார்.
அதே போல மத்திய நிதி அமைச்சரை சந்திக்க தேதி கேட்டுள்ளோம்.நேரம் கிடைத்தால் டெல்லி சென்று சந்திப்போம் எனவும் இலையென்றால் சென்னையில் கூட்டம் கூட்டி தேதி அறிவிப்போம் என தெரிவித்தார்.தற்போது அனைத்து பொருட்களும் விலை உயர்ந்து வருகிறது.இந்த நேரத்தில் ஜிஎஸ்.டி யும் அதிகரித்தால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள்,சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம்.பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் இதுவரை மத்திய அரசு செவி சாய்க்கவில்லை எனவும் கொரோனா கால கட்டம் என்பதால் மீண்டும் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம் என தெரிவித்தார்.
தொடர்ந்து சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு நீடித்தால் அடுத்த 5 ஆண்டுகளில் 40 விழுக்காடு வணிகர்கள் காணாமல் போவார்கள் என்பதை மத்திய மாநில அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் கொரோனா கால கட்டம் என்பதால் போராட்டங்கள் சற்று குறைந்துள்ளது என தெரிவித்த அவர் மூன்றாம் அலை வரும் என கூறியிருப்பதால் அதனை அனுசரித்து போராட்ட தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து டோல் கட்டணம் மற்றும் பெட்ரோல்,டீசல் விலை உயர்வு தான் அனைத்து பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் எனவும் வெளிநாட்டு நிறுவனங்கள் மிக சூழ்ச்சியாக பொருட்களின் விலையை உயர்த்தி வருகின்றன.எனவே அரசு வணிகர் சங்கங்களை அழைத்து ஒரு கட்டமைப்பை உருவாக்கினால் மட்டுமே விலை ஏற்றத்தை குறைக்க முடியும்,கையூட்டு பெறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கயை அரசு மேற்கொண்டால் மட்டுமே அரசு அதிகாரிகள் கையூட்டு பெறுவதை தடுக்க முடியும் எனவும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய கூடாது என்பதில் வணிகர் சங்க பேரமைப்பு தெளிவாக உள்ளது என தெரிவித்தார்.