December 16, 2021 தண்டோரா குழு
பெண்களின் திருமண வயதை 18இல் இருந்து 21ஆக உயர்த்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சர்தா சட்டம் திருத்தப்பட்டு 1978ஆம் ஆண்டு ஆண்களுக்கான திருமண வயது 21 என்றும், பெண்களுக்கு 18 என்றும் ஆனது. அதன்படி, நம் நாட்டில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகவும், ஆண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21 ஆகவும் உள்ளது.
இதனிடையே, நாட்டின் 74 ஆவது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை மறுபரீசிலனை செய்ய மத்திய அரசு குழு அமைத்துள்ளது. அந்த குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் அவர்களின் குறைந்தபட்ச திருமண வயதை நிர்ணயிப்பது தொடர்பாக உரிய முடிவு எடுக்கப்படும் என்றார்.
இந்த நிலையில், பெண்களின் திருமண வயதை 18இல் இருந்து 21ஆக உயர்த்தும் சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நடப்பு குளிர் காலக் கூட்டத்தொடரிலேயே மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.