November 28, 2017 தண்டோரா குழு
பெண்கள் தொழில் தொடங்குவதிலும், தொழில் செய்வதிலும்தற்போதும் ஏராளமான தடைகள் உள்ளதாக அமெரிக்க அதிபர் மகள் இவாங்கா ட்ரம்ப் கூறியுள்ளார்.
தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில், உலக தொழில் முனைவோர் மாநாடு துவங்கியது.இதில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளுடன் உலக தொழில் முனைவோர் மாநாடு துவங்கியது.
விழாவில் பேசிய இவாங்கா ட்ரம்ப்,
“உற்சாகமான வரவேற்பு அளித்த இந்திய மக்களுக்கு நன்றி. இந்தியாவில் முதன்முறையாக தொழில்முனைவோர் மாநாடு நடப்பது இந்தியாவின் வளர்ச்சியைக் காட்டுகிறது. தேனீர் விற்பனையாளராக இருந்து இந்தியாவின் பிரதமராகியுள்ளார் மோடி இந்தியாவின் பொருளாதாரத்தை சிறப்பான நிலையை நோக்கி மோடி அழைத்துச் செல்கிறார்.
உலக தொழில் முனைவோர் மாநாட்டில் மோடி கலந்து கொண்டுள்ளது சிறப்பு வாய்ந்தது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்ட நாடு இந்தியா மோடியின் தலைமையின் கீழ் 130 கோடி மக்களை கொண்ட இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது.
இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் உலக அளவில் பல்வேறு கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றனர். இந்தியாவின் விண்கலன் செவ்வாய் மற்றும் நிலவை நோக்கி சென்றுள்ளது.
இந்தியா – அமெரிக்கா இடையே பொருளாதார மற்றும் பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு உள்ளது.
இந்தியா மிக உண்மையான நட்பு நாடு என்று டிரம்ப் வெள்ளை மாளிகையில் கூறியுள்ளார். உலக தொழில் முனைவோர் மாநாட்டை இந்தியாவுடன் இணைந்து நடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது. இன்று ஏராளமான பெண் தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். உலக தொழில் முனைவோர் மாநாட்டில் இந்த முறை பெண் தொழில் முனைவோர் சுமார் 500 பேர் பங்கேற்றுள்ளனர்.
எந்தமுறையும் இல்லாத அளவிற்கு இந்த முறை அதிக பெண் தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். பெண்கள் தொழில் முனைவோர்களாவது உலக அளவில் சுமார் 10 விழுக்காடு அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் சுமார் 1 கோடியே 10 லட்சம் பெண் தொழில் முனைவோர் உள்ளனர்.பெண்கள் மூலமாக தொழிலை மேம்படுத்துவது சமுதாயத்திற்கும் மிகச்சிறப்பான பலனை வழங்கும். தொழில் தொடங்குவதிலும், தொழில் செய்வதிலும் பெண்களுக்கு தற்போதும் ஏராளமான தடைகள் உள்ளன. பெண்கள் தொழில் தொடங்க முதலீடு கிடைப்பது தான் மிகப்பெரிய சவாலாக உள்ளது”.
இவ்வாறு அவர் பேசினார்.