June 12, 2017 தண்டோரா குழு
சென்னையில் ஐ.ஐ.டி,.யில் ஆர்ப்பாட்டத்தில் பெண்ணின் கையை முறித்த காவலர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சந்தைகளில் மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை என்று அண்மையில் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சென்னை ஐ.ஐ.டி.,யில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வரும் மாணவர் சூரஜ், மாட்டுக்கறி உணவுத் திருவிழா நடத்தினர். இதனால் சக மாணவரால் அவர் தாக்கப்பட்டார்.
இந்நிலையில் சூரஜை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ் இயக்கங்கள், மாணவர் அமைப்பினர் ஆகியோர் ஐஐடி வளாக வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரின் கையை பெண் காவலர் ஒருவர் முறித்தார். பெண் காவலரின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வெளியாகி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பெண் கை முறிக்கப்பட்டது குறித்து 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பெண்ணின் கையை முறித்த காவலர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்றும் நீதிமன்றம் கேள்வி எழுபியது.