December 13, 2022
தண்டோரா குழு
கோவை தெலுங்குபாளையம் புதூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 54).தொழிலாளி.இவர் கடந்த 2017-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செங்குளம் கிராமத்தை சேர்ந்த பெயிண்டர் தொழில் பார்க்கும் பிரபு என்பவரை வாய்தகராறில் கத்தியால் குத்தினார். இதில் பிரபு படுகாயம் அடைந்தாா். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து செல்வபுரம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை கோவை கோர்ட்டில் நடந்து வந்தது.இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது நீதிபதி நம்பிராஜன் வழக்கை விசாரித்து கொலை முயற்சியில் ஈடுபட்ட ஆறுமுகத்துக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.