March 29, 2016 வெங்கி சதீஷ்
பெல்ஜியம் நாட்டில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலுக்குப் பின் அங்கு இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்திய கணினி பொறியாளர் ராகவேந்திரன் கணேஷ் என்பவரது இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்தியா அரசு மற்றும் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து அவரைத் தேடும் பணியை பெல்ஜியம் அரசு மேற்கொண்டது. இந்நிலையில் அவர் உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கையில் அவரது பெற்றோர் இருந்தனர்.
அவர்களது நம்பிக்கையில் இடி விழுந்தது போல் நேற்று அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி அறிவிக்கப்பட்டது. அந்தச் செய்தியை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுராஜ் வெளியிட்டபோது, இந்தச் செய்தி தனது மனதில் இனம்புரியாத வலி ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் மனித வெடிகுண்டு வெடித்த அந்த ரயிலிலேயே சென்றுள்ளதால் அவரும் இந்த விபத்தில் பலியானார் என பெல்ஜியம் அரசு அறிவித்து அவரது உடலை பெல்ஜியத்தில் உள்ள அவரது உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து பாரதப்பிரதமரும் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். அப்போது இந்தியா ஒரு இளம் இந்தியரின் கனவு மற்றும் குறிக்கோள் தீவிரவாதத்தால் சிதைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று மாலை அவரது உடல் இந்தியா வந்தது. அங்கு அவரது உறவினர்கள் அனைவரும் அவரைப் பார்த்து கதறியது நெஞ்சை உலுக்கும் சம்பவமாக இருந்தது.
முன்னதாக ராகவேந்திரனின் தாயார் தமிழக முதல்வருக்கு அவன் என் மகன் மட்டுமல்ல தமிழகத்தின் மகன் மற்றும் இந்தியாவின் மகன் எனவே அவனது நிலை குறித்து அறிய உதவவேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.