April 3, 2017 தண்டோரா குழு
வேட்பாளர்களின் பேட்டியை தொலைக்காட்சியில் அதிக நேரம் ஒளிப்பரப்பினால் தேர்தல் செலவாக கருதப்படும் என்று ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை, காவல் ஆணையாளர் கரன் சின்ஹாவும் தேர்தல் அதிகாரி கார்த்திகேயனும் சந்தித்து பேசினர்.
அவர்கள் பேசியதாவது;
“வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி விரைவில் தொடங்கப்படும். வேறு தொகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றவர்கள் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்களிக்க முடியாது.
ஆர்.கே.நகர் தொகுதியில் 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. தொகுதியின் முக்கிய இடங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 4 மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
தேர்தல் அமைதியாகவும், நியாயமாகவும் நடத்தப்படும். தேர்தல் தொடர்பாக இதுவரை வந்த 145 புகார்களில் 141 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் அலுவலர்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் இரண்டாம் கட்டமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
வேட்பாளர்களின் பேட்டியை தொலைக்காட்சியில் அதிக நேரம் ஒளிப்பரப்பினால் தேர்தல் செலவாக கருதப்படும். அத்தொகை வேட்பாளர்களின் தேர்தல் செலவில் சேர்க்கப்படும்.
தேர்தல் பாதுகாப்பு பணியில் 100 பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ஆர்.கே.நகரில் ரூ.7 லட்சம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1,694 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் பேசினார்கள்