August 14, 2017 தண்டோரா குழு
கோவையின் அடையாளங்களில் ஒன்றான பேரூர் கோவிலின் படித்துறையில் கழிவுநீர், குப்பைகள் தேங்கியுள்ளதால் அங்கு வழிபடுவதற்காக வரும் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளன. அதைப் போக்க கோவில் நிர்வாகமும், பேரூர் பேரூராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
கோவை அருகே பேரூர் பகுதியில் உள்ளது பழமைவாய்ந்த பேரூர் கோவில். இறந்தவர்களுக்குத் திதி கொடுக்க இங்கு தினமும் திரளான பக்தர்கள் வருவது வழக்கம். பிற மாநிலங்களில் இருந்தும் கூட அதிகமானோர் இந்த கோவிலுக்கு வருகின்றனர்.
இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோவிலுக்கு வருமானம் அதிக அளவில் வருகிறது. ஆனால், கோவில் நிர்வாகமோ, பேரூர் பேரூராட்சியோ கோவிலின் படித்துறை ஒட்டி ஓடக்கூடிய நொய்யல் ஆற்றைப் பற்றி சிறிதும் கவலைபடுவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஒட்டுமொத்த கோவிலின் கழிவும், பேரூர் பகுதியில் உள்ள அனைத்து சாக்கடைக் கழிவும் நேரடியாக நொய்யல் ஆற்றில் கலக்கிறது. இதனால் கோவில் படித்துறை அருகில் கழிவுநீர், குப்பைகள் தேங்கியுள்ளன. இதனால் திதி கொடுக்க வரும் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தண்ணீர் குட்டை போல் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் ஏற்படுகிறது. அதிக அளவிலான கொசுக்களும் உற்பத்தி ஆகி பகல் நேரங்களிலேயே கொசுக்கடிக்கு இந்தப் பகுதி மக்களும், பக்தர்களும் ஆளாகிறார்கள்.
குப்பைகளை அகற்றுவதற்குப் போதுமான தூப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக கடந்த வருடம் நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து அறநிலையத் துறை, கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்தில் பொதுமக்கள் மனு அளித்தும் தற்போது வரை அதே நிலையே தொடர்கிறது.
இது குறித்து மேற்கு மண்டல ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் முஹமத் ராபி கூறியதாவது:
சாக்கடை நீர் ஒரு சொட்டுக் கூட தமிழகத்தின் எந்த ஆற்றிலும், குளத்திலும் கலப்பதில்லை என்று தமிழக அரசு தமிழக சட்டப் பேரவையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது
இந்தத் திட்டத்திற்காக மட்டும் நம்மிடமிருந்து கூடுதலாக ௦.5 சதவிகிதம் வரி வசூல் செய்யப்படுகிறது. ஏற்கனவே, இந்த பணியைத்தான் உள்ளாட்சி அமைப்புகளும் செய்கின்றன. ஆனால், இது விஷயத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நொய்யல் ஆறு மாசுபடுவதால் நிலத்தடி நீர் முற்றிலும் மாசு அடைந்துவிட்டது. அதைத் தடுக்க சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும். கழிவுநீரை அதில் கலக்கச் செய்ய வேண்டும்” என்றார் முஹமத் ராபி.
இது குறித்து பேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் கூறுகையில், “கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய நிலையங்கள் அமைக்க பேரூராட்சியில் இடமில்லை. கோவில் நிர்வாகம் இடம் அளித்தால் அதில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். கொசுக்கள் உற்பத்தியாகதவாறு கொசுக்களை கொல்ல மருந்து அடிக்கப்பட்டு வருகிறது” என்றார்.
கோவிலின் தூய்மைத் தன்மையைப் பாதுகாத்து பக்தர்களின் நலனைக் காக்கவேண்டும் என்று