April 13, 2016 தண்டோரா குழு
பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைத்தளங்களின் தாக்கம் தற்போது உள்ள நவீன உலகில் பெரும் பங்கு வகிக்கிறது. உலகில் பல கோடி மக்கள் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகிறார்கள்.
இதுமட்டுமின்றி அதன் மூலம் சிலர் வியாபாரம் மற்றும் தகவல் பரிமாற்றமும் செய்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க சிலர் அதிலிருந்து ஒருபடி மேலே போய் பேஸ்புக் மூலம் நண்பர்களாகி, பின்பு திருமணமும் செய்து கொள்கிறார்கள்.
அதுபோன்ற ஒருசம்பவம் தற்போது இந்தியாவில் நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த எமிலி என்ற 41 வயது பெண்ணும், குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஹிதேஷ் சாவ்டா (வயது 23) என்பவரும் பேஸ்புக்கில் நண்பர்களாகப் பழகிவந்துள்ளனர்.
ஆங்கிலம் தெரியாத ஹிதேஷ் சாவ்டா கூகுள் மூலம் மொழி பெயர்த்து எமிலியுடன் சாட்டிங் செய்து வந்துள்ளார். அவரைப் போலவே ஹிதேஷ் சாவ்டா ஹிந்தியில் அனுப்பும் தகவலை எமிலி, கூகுள் மூலம் மொழி பெயர்த்து புரிந்து கொண்டு இருவரும் பேசி வந்துள்ளனர்.
சில மாதங்கள் நண்பர்களாகப் பழகி வந்த இருவரும், நாளடைவில் காதலிக்க தொடங்கியுள்ளனர். பின்னர் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில், வீடியோ கான்பிரஷிங்கின் மூலம் தங்கள் காதலை வளர்த்துள்ளனர். இந்த நிலையில் ஹிதேஷை நேரில் சந்திக்க விரும்பி எமிலி இந்தியாவிற்கு வந்துள்ளார்.
இதையடுத்து இவர்கள் காதல் விவகாரம் ஹிதேஷ் சாவ்டா வீட்டிற்குத் தெரியவர, முதலில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த ஹிதேஷின் பெற்றோர், பின்னர் இருவரின் காதலை புரிந்து கொண்டு திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பெற்றோர் சம்மதத்துடன் இவர்களது காதல் திருமணம் நடந்துள்ளது.
இது குறித்து எமிலி கூறும்போது, ஹிதேஷின் அன்பு உண்மையானது. அவருடைய எளிமையும் வெகுளித்தனமே என்னை மிகவும் கவர்ந்தது எனத் தெரிவித்துள்ளார்.
இக்காதல் திருமணம் பற்றி ஹிதேஷ் கூறுகையில், எமிலிக்கு இந்தியப் பாரம்பரியமும், பண்பாட்டுக் கலாச்சாரமும் மிகவும் பிடித்திருப்பதாகவும் இதனால் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.