June 21, 2017 தண்டோரா குழு
சமூக வலைத்தளமாக பேஸ்புக்கில் விதவிதமாக புகைப்படங்கள் எடுத்து அதை நண்பர்களுடன் பகிர்ந்து அதிக லைக்ஸ் வாங்குவது என்பது தற்போது வாடிக்கையாகிவிட்டது. அதிக லைக்ஸ்காக பலர் ஆபத்தையும் உணராமல் புகைப்படங்களை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் ஃபேஸ்புக்கில் அதிக லைக்ஸ் வாங்க வேண்டும் என்பதற்காக, ஒருவர் தனது குழந்தையை உயரமான மாடியிலிருந்து வெளியே நீட்டி, விபரீதச் செயலைச் செய்திருக்கிறார்.
அல்ஜீரியாவை சேர்ந்த ஒருவர்ஃபேஸ்புக்கில் 1,000 லைக்குகள் வாங்க வேண்டும் என்பதற்காக, 15-வது மாடியின் ஜன்னலிலிருந்து தன் குழந்தையின் சட்டையைப் பிடித்து அந்தரத்தில் தொங்கவிட்டிருக்கிறார். குழந்தை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்போது அதை புகைப்படம் எடுத்து, ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.
இதுமட்டுமின்றி ‘எனக்கு 1,000 லைக்குகள் வேண்டும்; இல்லையென்றால் குழந்தையை விட்டுவிடுவேன்’ என்ற வாசகத்தையும் பதிவுசெய்திருக்கிறார்.
ஃபேஸ்புக்கில் இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் குழந்தையை மீட்கக் கோரியும், குழந்தையின் தந்தையைக் கைது செய்யகோரியும் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள், குழந்தையை பத்திரமாக மீட்டனர். மேலும் குழந்தையின் பாதுகாப்புக்கு பாதிப்பு உண்டாக்கியதாகக் குற்றச்சாட்டிற்காக
குழந்தையின் தந்தையைக் கைது செய்தனர்.