October 5, 2021 தண்டோரா குழு
வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை பிரபல சமூக ஊடகமான ஃபேஸ்புக் கையகப்படுத்தி நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் பேஸ்புக், வாட்ஸ் அப் , இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்கள் நேற்று இரவு 9 மணி முதல் திடீரென செயல்படாமல் முடங்கின.இந்த பாதிப்பு உலகம் முழுவதும் ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். சுமார் 7 மணி நேரத்திற்கு பிறகு இந்த கோளாறு சரி செய்யப்பட்டது.
கடைசியாக கடந்த 2019ம் ஆண்டில் பேஸ்புக் சேவை முடங்கியது. எனினும், இது ஒரு மணி நேரத்தில் சரி செய்யப்பட்டது. தற்போது ஏற்பட்டது மிகப் பெரிய சேவை பாதிப்பு என டவுண்டிடெக்டர் (Downdetector) நிறுவனம் கூறியுள்ளது.வெறும் 7 மணி முடக்கத்ததால் பேஸ்புக் நிறுவனரும் சி.இ.ஓ.வுமான மார்க் சக்கர்பெர்க் 7 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்துள்ளார். இது இந்திய மதிப்பில் சுமார் 52 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.
இதன் மூலம் அவரது சொத்து மதிப்பு 120.9 பில்லியன் டாலராக குறைந்தது. மேலும் உலக பணக்காரர் வரிசையில் பில் கேட்ஸுக்கு கீழாக அடுத்த இடத்தில் 5வது இடத்துக்கு மார்க் சென்றுள்ளார்.மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 140 பில்லியன் டாலராக இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் 13ம் தேதியில் இருந்து இதுவரை 19 பில்லியன் டாலர் இழப்பை அவர் சந்தித்துள்ளார்.