December 31, 2016 தண்டோரா குழு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வழக்கமான விரைவு பஸ்களில் முன்பதிவு முடிந்து விட்டன. சிறப்பு பஸ்களில் பயணம் செய்வதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊருக்குப் பயணமாக ரயிலில் முன் பதிவு செய்ய இயலாதவர்கள் அரசு பஸ்களையே சார்ந்திருக்கின்றனர்.
இந்த சிறப்புப் பேருந்துகள் வருகிற 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை இயக்கப்படுகின்றன. 13-ம் தேதி போகிப் பண்டிகையும், 14-ம் தேதி பொங்கல் பண்டிகையும், 15-ம் தேதி மாட்டுப் பொங்கலும், 16-ம் தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்பட இருக்கின்றன. பொதுமக்கள் வசதிக்காக சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் செல்ல 11,270 சிறப்பு பஸ்கள் மூன்று நாட்களுக்கும் சேர்ந்து இயக்கப்படுகின்றன.
இது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-
தென்மாவட்டங்களுக்கு வழக்கமாகச் செல்லும் விரைவு பஸ்களில் (எஸ்.இ.டி.சி.) முன்பதிவு முடிந்து சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
300 கிலோ மீட்டருக்கு மேல் செல்லும் சிறப்பு பஸ்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய கோயம்பேட்டில் 26 சிறப்பு கவுண்டர், தாம்பரம் 2, பூந்தமல்லி-1 என மொத்தம் 29 கவுண்டர்கள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சிறப்பு கவுண்டர்கள் வருகிற 9-ம் தேதி திறக்கப்படும். டிக்கெட் முன்பதிவை காலை 7 மணி முதல் இரவு 9-மணி வரை செய்து கொள்ளலாம்.அத்துடன், www. tnstc.in என்ற இணையதளத்திலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.