March 19, 2022 தண்டோரா குழு
கேரளா நீர்ப்பாசனத்துறை ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அணையிலிருந்து அதிகப்படியான நீரினை சிறுவாணி ஆற்றில் திறந்துவிட்டு அணையின் நீர் மட்டத்தை மிக கணிசமாக குறைத்துள்ளது. பொதுமக்கள் குடிநீரினை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளதாவது:
கடந்த மூன்று வருடங்களாக கேரளா நீர்ப்பாசனத்துறை அணை பாதுகாப்பு காரணம் என்று கூறி சிறுவாணி அணை முழு கொள்ளளவு அடைய அனுமதிப்பதில்லை. அதிலும் குறிப்பாக கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அணையிலிருந்து அதிகப்படியான நீரினை சிறுவாணி ஆற்றில் திறந்துவிட்டு அணையின் நீர் மட்டத்தை மிக கணிசமாக குறைத்துள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வர் கடந்த பிப்ரவரி 1ம் தேதி நாளன்று கேரளா முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். எனினும் அணையில் நீர்மட்டம் குறைந்த காரணத்தினால் சிறுவாணி அணையிலிருந்து குகைவழிப்பாதை வழியாக நாளொன்றுக்கு வரும் நீரின் அளவு மிகவும் குறைந்துள்ளது. அதனால் திட்டத்தை இயக்கி பராமரித்து வரும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நாளொன்றுக்கு வழங்க வேண்டிய நீரின் அளவு 90 மில்லியன் லிட்டருக்கு பதிலாக 60 மில்லியன் லிட்டருக்கும் குறைவாகவே வழங்கி வருகிறது.
இதனால் சிறுவாணி விநியோக பகுதிகளில் குடிநீர் விநியோக நாட்கள் இடைவெளி அதிகமாகியுள்ளது. இதனை நேர் செய்யும் பொருட்டு பில்லூர் குடிநீர் திட்டத்தில் கூடுதல் நீருந்திகள் பயன்படுத்தி கூடுதலாக நீரெடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பில்லூர் நீரினை சிறுவாணி பகுதியுடன் பகிர்ந்து பில்லூர் மற்றும் சிறுவாணி விநியோகப் பகுதிகள் இரண்டிலும் ஒரே மாதிரி சீரான இடைவெளியுடன் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அடுத்து வரும் மழைக்காலம் வரை பில்லூர் மற்றும் சிறுவாணி நீர் பயன்பாட்டு பகுதிகள் அனைத்துக்கும் குடிநீர் இடைவெளி காலத்தை குறைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் குடிநீரினை சிக்கனமாக பயன்படுத்தி ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.