July 22, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பொது இடங்களில் விளம்பரம் எழுதுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால், அபராதம் விதிப்பதுடன் குற்றவியல் வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பொது இடங்கள், அரசுக் கட்டடங்கள், சுவர்கள், தெரு விளக்கு கம்பங்கள், சாலை மைய திட்டுகள், பாலங்கள் மற்றும் இயற்கை வளங்களில் விளம்பரங்கள் எழுதவோ, சுவரொட்டிகள் ஒட்டவோ கூடாது.
மீறினால் சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனம் அல்லது விளம்பர நிறுவனங்கள், தொழில் சங்கங்கள், அரசியல் அமைப்புகள், பொது நிகழ்ச்சி மற்றும் குடும்ப நிகழ்ச்சிக்காக சுவரொட்டி வைப்பவர்கள் ஆகியோருக்கு அபராதம் விதிப்பதுடன் குற்றவியல் வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.