June 28, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட ஒண்டிப்புதூர் பட்டணம் அருகே இட்டேரி சாலையில் தனியார் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புக்கு செல்லும் 30 அடி அகலம் கொண்ட டிரைவ் வே எனப்படும் வண்டிப்பாதை பொது வழி ஆக்கிரமிக்கப்பட்டு கேட் வைத்து அடைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் தனி நபர் ஒருவர் கோவை மாநகராட்சியில் புகார் அளித்ததன் அடிப்படையில் கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் தலைமையில் அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொதுப்பாதையை அடைத்து கேட் அமைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கோவை மாநகராட்சி செயற்பொறியாளர் (திட்டம்) சார்பில் தனியார் குடியிருப்பு உரிமையாளர் சங்க தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.அத்துடன் அந்த நோட்டீஸ் நகல் பொதுப்பாதையை அடைத்து வைக்கப்பட்ட கேட்டிலும் ஒட்டப்பட்டது.
மாநகராட்சி சார்பில் ஒட்டப்பட்ட அந்த நோட்டீசில்,
‘‘சிங்காநல்லூர் கிராமம் 58-வது வார்டு தனியார் குடியிருப்புக்கு செல்லும் 30 அடி அகலமுள்ள டிரைவ் வே பகுதியில் கிரில் கேட் அமைத்து பொது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமித்துள்ளீர்கள். இந்த அறிவிப்பு கிடைத்த 7 நாட்களுக்குள் அந்த கேட்டை அப்புறப்படுத்த வேண்டும். தவறுமபட்சத்தில் மறு அறிவிப்பு இன்றி கோவை மாநகராட்சி சட்டப்பிரிவு 441-ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டு குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும்.
மேலும் மாநகராட்சியால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு அதற்கான செலவு தொகையை தங்களிடம் வசூலிக்கப்படும்’’ என்று கூறப்பட்டிருந்தது. இதனிடையே தற்போது வரை கேட் அகற்றப்படவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் கேட்டை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.