February 17, 2017 தண்டோரா குழு
முதலமைச்சருக்குரிய பொறுப்புகளையும், கடமைகளையும் உணர்ந்து தமிழக மக்களின் நலனுக்காகவும்,மேம்பாட்டுக்காகவும் எடப்பாடி கே. பழனிச்சாமி ஆட்சி நடத்திட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெள்ளிக்கிழமை கூறியிருப்பதாவது:
“தமிழக முதலமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்ட எடப்பாடி கே. பழனிச்சாமி 15 நாள்களில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி சட்டப் பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை தி.மு.க. வரவேற்கிறது.
தமிழகத்தில் 2016-ம் நடைபெற்ற சட்டப் பேரவைக்கான தேர்தலுக்குப் பிறகு இதுவரை தமிழகம் காணாத வகையில் மூன்றாவது முதலமைச்சரை அ.தி.மு.க-வின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்வு செய்திருப்பது ஒரு விநோதமான “ஹாட்ரிக்“ சாதனை.
தமிழகத்தில் தற்போது புதிதாக அமைந்த ஆட்சியைப் பொருத்தமட்டில் ஏற்கனவே செயல்படாமல் உறக்கத்தில் இருந்த அ.தி.மு.க. ஆட்சியின் தொடர்ச்சி தான் இது.
அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு புதிய முதலமைச்சரை நியமித்து, ஆட்சி அமைக்க ஆளுநர் அனுமதி அளித்திருந்தாலும், அமையப் போகும் அரசால் தமிழக மக்களுக்கு நிலையான நிம்மதி கிடைக்குமா என்பதில் தெளிவு இல்லை.
தமிழக முதலைமச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு தி.மு.க. சார்பில் வாழ்த்துகள். அதே நேரத்தில், பெங்களூரூ சிறைக்குச் சென்று ஆலோசனைகள் கேட்டு “ரிமோட் கன்ட்ரோலில்“ இயக்கப்படாமல், அரசியல் சட்டப்படி எடுத்துக் கொள்ளும் உறுதிமொழிக்கும் ரகசிய காப்பு பிரமாணத்துக்கும் பங்கம் ஏற்படாமல் முதலமைச்சர் செயல்பட வேண்டும்.
முதலமைச்சருக்குரிய பொறுப்புகளையும், கடமைகளையும் உணர்ந்து தமிழக மக்களின் நலனுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் எடப்பாடி கே. பழனிச்சாமி ஆட்சி நடத்த வேண்டும்”
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.