May 15, 2017 தண்டோரா குழு
அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக கோவையில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் அரசு பேருந்துகள் முழுமையாக இயக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கியுள்ளனர்.கோவை மாவட்டத்தில் நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக 75சதவீதமான பேருந்துகள் இயக்கப்படவில்லை.இதனால் நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் அரசு பேருந்துகள் முழுமையாக இயக்கப்படததால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
கோவையில் இருந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், ஊட்டி, கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட சுற்றுலாப் பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவது வழக்கம். அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலணி பேருந்து நிலையத்தில் இருந்து, நீலகிரிக்கு செல்லும் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.
பெரும்பாலான அரசு பேருந்துகள் இயங்கததால், தனியார் சொகுசு பேருந்துகள் நீலகிரி மாவட்டத்திற்கு கோவையில் இருந்து இயக்கப்படுகின்றன. ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் பேருந்திற்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாகவும், தனியார் பேருந்துகளில் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். அவசர தேவைகளுக்காக ஊட்டி செல்ல வேண்டிய பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றன.