January 19, 2017 தண்டோரா குழு
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள், லாரிகள் சம்மேளனம், கால்டாக்சி ஓட்டுநர்கள் வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பந்த் அறிவித்துள்ளன.
ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்திற்குப் பல தரப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்தச் சூழலில் போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் வெள்ளிக்கிழமை பந்த் அறிவித்துள்ளன. இதில், பத்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளன.
இதே போல் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கால் டாக்சி, ஆட்டோ, வேன் ஆகியவையும் அன்றைய தினம் இயங்காது என அதன் ஓட்டுநர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால், வெள்ளிக்கிழமை போக்குவரத்தில் சிக்கல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கோவையில், மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக, வெள்ளிக்கிழமை லாரிகள் இயங்காது என கோவை மாவட்ட லாரிகள் சம்மேளனம் அறிவித்துள்ளது. இதனால், அத்யாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 10 லட்சம் வாகனங்கள் இயங்காது என எதிர்பார்க்கப்படுகிறது.