January 25, 2017
தண்டோரா குழு
உத்தரப் பிரதேசத்தில் 95 வயது மூதாட்டி சட்டப் பேரவைக் களத்தில் இறங்குவதற்குத் தயாராகிவிட்டார்.
மாநிலத்தில் நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடுவதற்கு 95 வயதான ஜல் தேவி என்ற பாட்டி வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இவர் பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபடுபவர் என்பது வியப்பிலும் வியப்பு.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் பிப்ரவரி மாதம் 11ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஆக்ரா மாவட்டத்தில் உள்ள கேராகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
“இந்தத் தள்ளாத வயதில் போட்டியிடக் காரணம் என்ன” என்று கேட்டால், “ஊழலை ஒழிப்பதும், மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதும்தான் எனது நோக்கம். இந்த உடல் அனுமதிக்கும் வரையில் அதற்காகப் பாடுபடுவேன்” என்கிறார் ஜல் தேவி.
“தற்போதைய மாநில அரசு மக்களை ஏமாற்றியும் அவர்களுக்கு எல்லாவித தொல்லைகளையும் தருகிறது. ஆட்சியாளர்களத் தங்களது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால், என்னிடம் இருக்கும் லத்தியை பயன்படுத்த தயங்கமாட்டேன்” என்று கம்பீரமாகப் பேசினார்.
கடந்த ஆண்டு நடைப்பெற்ற ஜில்லா பஞ்சாயத்துத் தேர்தலில் 12,௦௦௦ வாக்குகளை பெற்று வெற்றியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.