May 17, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் போட்டி தேர்வுகளாகிய மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வு குழுமம், வங்கி பணியாளர் தேர்வு குழுமம் உள்ளிட்ட தேர்வுகளை எழுதி வெற்றி பெற ஏதுவாக கோவை மாவட்டத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளது.
தமிழக இளைஞர்கள், மத்திய அரசின் போட்டி தேர்வுகளை எளிதாக அணுகுவதற்கு பயிற்சி அளிக்கும் நோக்கில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டி தேர்வு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்வுகளுக்கு சிறந்த முறையில் இலவச பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டத்தின் முதல் கட்டமாக ரயில்வே, வங்கி உள்ளிட்ட தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி கோவை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 25ம் தேதி முதல் துவங்கப்படவுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்துக்கு தலா 150 மாணவர்கள் வீதம் நேரடி வகுப்பறை பயிற்சி சிறந்த வல்லுநர்களை கொண்டு வழங்கப்படும். 300 மணி நேர தனிவழி காட்டல், 100-க்கும் மேற்பட்ட மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். பயிற்சி காலம் 100 நாட்கள். இந்த பயிற்சிக்கு வரும் 20ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க naanmudhalvan.tn.gov.inஎன்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.