March 7, 2017 தண்டோரா குழு
போபால்-உஜ்ஜைன் பயணிகள் ரயிலில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் நான்கு பேர் காயமடைந்தனர்.
இது குறித்து ரயில்வே அதிகாரி கூறுகையில், “மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஜப்தி ரயில் நிலையத்திற்கு அருகில் 5932௦ போபால்-உஜ்ஜைன் பயணிகள் ரயிலில் குண்டு வெடித்ததில் 4 பேர் காயமடைந்தனர்” என்றார்.
“போபால் வழியாக உஜ்ஜைன் செல்ல வேண்டிய ரயிலின் பொது பெட்டியில் காலை 9.3௦ முதல் 1௦ மணி இடையே வெடிகுண்டு வெடித்தது” என்று ரயில்வே அதிகாரி ஜிதேந்திரா குமார் ஜெயந்த் கூறினார்.
“ஷரஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கலாபிபல் நகரில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் காயமடைந்த 4 பேரை சேர்த்துள்ளோம். மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர்” என்று ரயில்வே அமைச்சகம் தனது அதிகாரப் பூர்வமான ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சேஹோர் ரயில் நிலையத்திற்கும் கலாபிபல் நகருக்கும் இடையே ஜப்தி அமைந்துள்ளது. ஜப்தி ரயில் நிலையம் அருகில் வந்து கொண்டிருந்தபோது வெடிகுண்டு வெடித்ததில் பொது பயணிகள் பெட்டியின் கண்ணாடிகள் உடைந்து சிதறின. பெட்டி முழுவதும் புகை சூழ்ந்தது. அதில் இருந்த பயணிகள் தங்கள் உயிரை காத்துக் கொள்ள பெட்டியிலிருந்து அவசர அவசரமாக கீழே இறங்கியுள்ளனர்.
“இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும். நிவாரண ரயில் சம்பவ இடத்திற்கு வந்துக்கொண்டிருக்கிறது” என்று ரயில்வே அதிகாரி ஜெயந்த் கூறினார்.
பிப்ரவரி மாதம் மன்சி மற்றும் மகேஷ்குட் ரயில் நிலையத்திற்கு இடையே உள்ள தண்டவாளத்தில் விரிசல் இருப்பதைச் சரியான நேரத்தில் கண்டறிந்து, அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்ததால் புதுதில்லி-திப்ருகர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் பெரும் விபத்திலிருந்து தப்பியது.
ஓடிஸா ஆந்திரா எல்லையில் உள்ள குன்னேரு ரயில் நிலையத்தில் ஹிராக்ஹந்த் எக்ஸ்பிரஸ் ஜனவரி 2௦ம் தேதி தடம்புரண்டதில் 40 பேர் உயிரிழந்தனர்.