March 24, 2017 தண்டோரா குழு
ரோம் அருகே உள்ள வாடிக்கன் நகரில் கத்தோலிக்க கிறிஸ்துவ மக்களின் தலைவர் (போப்) பிரான்சிஸ் ஆசி வழங்கியபோது, அவர் தலையில் அணிந்திருந்த குல்லாவை 3 வயது சிறுமி எடுக்க முயன்ற சம்பவம் பார்த்தவர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
போப் பிரான்சிஸ் பொது மக்களை அவ்வப்போது சந்தித்து ஆசி வழங்குவது வழக்கம். அவ்வாறு அவர் புனித பீட்டர்ஸ் ஸ்குயர் ஆலயத்தில் வியாழக்கிழமை மக்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தார்.
ஜார்ஜியாவிலிருந்து வந்த குடும்பத்தினர் தங்கள் 3 வயது பெண் குழந்தையுடன் போப்பிடம் ஆசி பெற வந்திருந்தனர். அந்த குழந்தையின் பெயர் எச்டெல்லா வேச்டிரிக். போப் அக்குழந்தையின் கன்னத்தில் முத்தம் கொடுக்க முயன்றபோது, அவர் தலையில் அணிந்திருந்த வெள்ளை குல்லாவை அந்த குழந்தை எடுக்க முயன்றது.
அக்குழந்தை தன் தலையிலிருந்த குல்லாவை எடுத்த முயன்றபோது, போப் கோபம் அடையாமல் சிரித்தார். “என்னுடைய குல்லாவை திருடப்பார்கிறாயா?” என்று செல்லமாக கொஞ்சினார். அந்த காணொளி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து குழந்தையின் தந்தை கூறுகையில்,
“போப்பிடம் செல்லும் முன் அவள் சிறிது பயத்துடனே சென்றாள். ஆனால், அவருடைய குல்லாவை பயமில்லாமல் எடுத்துவிட்டாள். இது அங்கிருந்த அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது. போப் கூட சிரித்து விட்டார்” என்றார்.
மேலும் “அவள் அவருடைய குல்லாவை திருடிவிட்டாள்” என்ற தலைப்பை எழுதி, அந்த காணொளியை ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் அக்குழந்தையின் தந்தை பதிவிட்டார். அந்த காணொளிக்கு 13,௦௦௦ லைக்குகளும், 6,2௦௦ ரீட்விட்டும் தற்போது வரை கிடைத்துள்ளன.