March 15, 2016 வெங்கி சதீஷ்
9000 கோடியைச் சுருட்டிக்கொண்டு விஜய மல்லையா நாட்டை விட்டு ஓடியதாகச் செய்தி வந்த அதே நாளில் திருச்சி அருகே உழவுக்கு டிராக்டர் வாங்கி இரண்டு மாதம் தவணை கட்ட மறந்த விவசாயி பாலனை காவல்துறையினர் அடித்து உதைத்து காவல்நிலையம் கொண்டு சென்றது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் கண்டனங்களைத் தெரிவித்ததோடு, தம் கடமை முடிந்தது என நினைத்த நிலையில், நடிகர்கள் கூட தங்கள் பங்கிற்கு அறிக்கை விட்டனர். அதோடு முடியாத பிரச்சினையைக் கையில் எடுத்த விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம், அதன் மாநில தலைவர் தலைமையில் ஒரத்தநாட்டில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.
அதில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டதை அடுத்து வருவாய்துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது விவசாயி பாலனை அடித்த அதிகாரிகளைக் கைது செய்யவேண்டும் எனவும், விவசாயி அழகர் தற்கொலைக்கு தூண்டிய நிதி நிறுவன அதிகாரிகளைக் கைது செய்யவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பின்னர் அந்த இரண்டையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்ததோடு, விவசாயி பாலனின் டிராக்டரையும் திருப்பி ஒப்படைத்தனர். அதை விவசாயி பாலனிடம் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க நிர்வாகிகள் ஒப்படைத்தனர். இது குறித்து பேசிய மாநில தலைவர் தெய்வசிகாமணி காவல்துறையினர் வாக்குறுதி கொடுத்ததுபோல் ஐந்து காவலர்கள் மீதும் கைது நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் போராடப்போவதாக அறிவித்தார்.