February 18, 2023 தண்டோரா குழு
கோவை போத்தனூரில் வசிப்பவர் முகமது ரபீக் (வயது 35).செல்போன் கடை உரிமையாளர். இவர் தனது ஸ்கூட்டரை விற்பனை செய்யப்போவதாக இணையதளத்தில் தெரிவித்தார். இதையடுத்து ரமேஷ் என்ற நபர் முகமது ரபீக்கை தொடர்பு கொண்டு தான் வங்கியில் வேலை செய்வதாகவும், ஸ்கூட்டரை வாங்கிக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இதனை நம்பிய முகமது ரபீக் தனது ஸ்கூட்டரை எடுத்து கொண்டு வெரைட்டி ஹால் ரோட்டிற்கு சென்றார். அங்கு வைத்து ஸ்கூட்டரை பரிசோதித்த ரமேஷ்,தனக்கு ஸ்கூட்டர் பிடித்து உள்ளது. ரூ.98 ஆயிரத்திற்கு வாங்கிகொள்வதாகவும் தெரிவித்து உள்ளார். மேலும் தன்னால் ரூ.98 ஆயிரத்தை ரொக்கமாக தர முடியாது. உங்களது வங்கி கணக்கில் பணத்தை செலுத்தி விட்டு ஸ்கூட்டரை பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார். இதற்கு முகமது ரபீக் சம்மதம் தெரிவித்தார்.
இதையடுத்து ரமேஷ் கூறிய வங்கி முன் தனது ஸ்கூட்டருடன் முகமது ரபீக் சென்றார். அங்கு ரமேஷ், முகமது ரபீக்கிடம் வங்கிக்கு வெளியே காத்திருக்கும்படியும், தான் உள்ளே சென்று பணத்தை கட்டி விட்டுஅதற்கான செலான் எடுத்து வருவதாக தெரிவித்தார்.இதையடுத்து முகமது ரபீக் வங்கிக்கு வெளியே காத்து கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து ரமேஷ் வங்கியில் பணம் செலுத்தியதற்கான செலானை முகமது ரபீக்கிடம் கொடுத்தார்.
வங்கி செலானை பார்த்ததும் தனது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு விட்டதாக நினைத்த முகமது ரபீக் தனது ஸ்கூட்டரை ரமேசிடம் கொடுத்தார். இதனை தொடர்ந்து ரமேஷ் அங்கிருந்து சென்றார். இதனிடையே முகமது ரபீக் தனது வங்கி கணக்கில் உள்ள தொகையை சரிபார்த்தார். ஆனால் அவரது வங்கி கணக்கில் ரூ.98 ஆயிரம் கிரடிட் ஆகவில்லை. இதையடுத்து சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று செலானை கொடுத்து விசாரித்தார்.
இதில் அப்படி ஒரு பணப்பரிவர்த்தனை எதுவும் நடைபெற வில்லை என்றும், அந்த செலானில் போலியாக சீல் வைக்கப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து முகமது ரபீக், ரமேசை தொடர்பு கொண்டார் ஆனார் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர் வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.