April 18, 2023 தண்டோரா குழு
கிரிப்டோ கரன்சி முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என கூறி போலியான லிங்க் அனுப்பி ரூ.9 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை கணபதியை சேர்ந்தவர் சுரேஷ் ரெட்டி (31). இவரது செல்போன் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு வந்த குறுந்தகவலில், கிரிப்டோ கரன்சியில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.இதை நம்பிய சுரேஷ் ரெட்டி அதில் உள்ள லிங்க்-கை கிளிக் செய்து உள்ளே நுழைந்தார்.
அதில் தினமும் 25 டாஸ்க் நிறைவு செய்தால் பணம் கிடைக்கும் என்றும், நீங்கள் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப லாபம் பெறலாம் என்றிருந்தது. இதையடுத்து அதில் உள்ள வங்கி கணக்கிற்கு முதற்கட்டமாக ரூ.18 ஆயிரம் முதலீடு செய்தார்.
இதனையடுத்து அவருக்கு லாபமாக ரூ.24,350 கிடைத்துள்ளதாக குறுந்தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து அவரது இரு வங்கி கணக்கில் இருந்து சிறிது, சிறிதாக ரூ.9 லட்சத்து 11 ஆயிரம் முதலீடு செய்தார்.தொடர்ந்து அவருக்கு லாபம் மற்றும் கமிஷன் தொகையாக ரூ.13,59,600 கிடைத்துள்ளதாக மோசடியாக குறுந்தகவல் அனுப்பப்பட்டது. அவர் முழு தொகையையும் தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. அப்போது மர்ம நபர் போலியான லிங்க் அனுப்பி அவரிடம் இருந்து ரூ.9 லட்சத்து 11 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது.
இது குறித்து சுரேஷ் ரெட்டி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.