March 17, 2023 தண்டோரா குழு
கோவையில் ரவுடிக்கு ஆதரவாக செயல்பட்ட 13 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரவுடி சத்திய பாண்டி (32) என்பவர் துப்பாக்கியால் சுட்டும் அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து நகர போலீசார் விசாரித்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராஜா சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடந்தார். இவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். இவர் கோவையில் ரவுடியாக பல்வேறு தரப்பினரை மிரட்டி கட்ட பஞ்சாயத்து செய்ததும், கூட்டாளிகளை வைத்து கூலிப்படைபோல் செயல்பட்டதும் தெரியவந்தது.
கோவையில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் விவகாரத்தில் சஞ்சய் ராஜா கட்டப்பஞ்சாயத்து செய்து, அதில் ஏற்பட்ட தகராறில்தான் சத்திய பாண்டி கொலை செய்யப்பட்டார். சத்திய பாண்டியை கொலை செய்த பின்னர் துப்பாக்கியை சரவணம்பட்டி அருகே உள்ள கரட்டுமேட்டில் பதுக்கி வைத்திருப்பதாக சஞ்சய் ராஜா போலீசாரிடம் கூறினார். இதனையடுத்து போலீசார் அவரை அங்கு அழைத்துச் சென்றனர். துப்பாக்கியை எடுத்ததும் சஞ்சய் ராஜா போலீசாரை நோக்கி அந்த துப்பாக்கியால் சுட முயன்றதாக தெரிகிறது. போலீசார் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக அவரது காலில் துப்பாக்கியால் சுட்டதாக தகவல் வெளியானது. பின்னர் சஞ்சய் ராஜா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் ரவுடி சஞ்சய் ராஜாவுக்கு சினிமா தியேட்டர் விவகாரத்தில் ஆதரவாக செயல்பட்டவர்கள் பட்டியலை போலீசார் தயார் செய்தனர். அப்போது 30 பேர் சஞ்சய் ராஜாவுக்கு ஆதரவாக செயல்பட்டது தெரியவந்தது. அவர்களில் தெலுங்கு பாளையத்தை சேர்ந்த ஜார்ஜ் (42), செல்வகுமார் (59), ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த ஜாபர் (43), கணுவாயை சேர்ந்த உதயகுமார் (58), போத்தனூரை சேர்ந்த கேசவன் (42), வடவள்ளியை சேர்ந்த சுப்ரமணியன் (60), இடையர்பாளையத்தை சேர்ந்த வாசன் (58), செல்வபுரத்தை சேர்ந்த சூரிய பிரசாத் (26), சரவணன் (44), குனியமுத்தூரை சேர்ந்த சக்திவேல் (48), சபரிராஜ் (31), காந்திபார்க்கை சேர்ந்த பிரகாஷ் (43), சாய்பாபா காலனியை சேர்ந்த பிரதீப் குமார் (52) உட்பட 13 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இவர்கள் மீது கொலை மிரட்டல், கட்டப்பஞ்சாயத்து, ஆயுத தடைச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 13 பேரையும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.