March 15, 2017 தண்டோரா குழு
மகனுடன் சேர்ந்து பெற்றோரும் மேல்நிலைத் தேர்வு எழுதியுள்ளனர். இச்சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது.
வீட்டு வேலை செய்யும் பெண் தன்னுடைய மகளுடன் சேர்ந்து பள்ளித் தேர்வுக்குச் செல்வதை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படம் ‘நீல் பட்டே சன்னடா’. அத்திரைப்படத்தின் கதை கோல்கத்தாவில் வசிக்கும் ஒரு தம்பதியின் வாழ்கையில் உண்மையாக நடந்துள்ளது.
மேற்கு வங்கத்தின் ரணகட் என்னும் இடத்தில் உள்ள ஆரோன்கட்டா ஹஜ்ராபூர் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் விப்லப் மண்டல் என்னும் இளைஞர் தன்னுடயை பெற்றோருடன் மேல்நிலை தேர்வு எழுதியுள்ளார்.
விப்லபின் 43 வயது தந்தை பலராம் ஒரு விவசாயி. அவனுடைய 33 வயது தாய் கல்யாணி. கடந்த சில ஆண்டுகளாகவே மூவரும் இந்தத் தேர்வை எழுதுவதற்கு விடாமுயற்சியுடன் தயார் செய்து வந்தனர். தாய் தந்தையருக்கு ஆசிரியராக விப்லப் செயல்பட்டு வந்தான்.
“நான் அவர்களுக்குப் பாடங்களைச் சொல்லிக் கொடுத்தேன். அவர்கள் ஆங்கிலப் பாடத்தில் பலவீனமாக இருந்தனர். அண்டை வீட்டார் ஒருவர் அவர்களுக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுத்தார்” என்று விப்லப் கூறினான்.
2௦14ம் ஆண்டு பலராம் மத்யமிக் என்னும் தேர்வை எழுதி வெற்றி பெற்றார். அதே போல் 2௦15ம் ஆண்டு அதே தேர்வைக் கல்யாணி எழுதி வெற்றி பெற்றார். அதன் பிறகு, ஆரன்கட்டா ஹஜ்ராபூர் பள்ளியில் சேர்ந்தனர். ஆனால் அந்தப் பள்ளியில் சேர்வது எளிதான செயல் அல்ல.
“எங்களுடைய மகன் மத்யமிக் தேர்வு எழுதி வெற்றி பெற்று மேல்நிலைப் பள்ளியின் சேர்ந்ததும், நாங்களும் அவனுடன் சேர்ந்து மேல்நிலைத் தேர்வு எழுத முடிவு செய்தோம். எங்களுக்கு வயது அதிகமாக இருந்ததால், பல பள்ளிகள் எங்களைச் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டனர். இறுதியில் ஆரன்கட்டா ஹஜ்ராபூர் பள்ளியில் இடம் கிடைத்தது” என்று பல்ராம் கூறினார்.
“விப்லபின் பெற்றோரின் கல்வி ஆசையைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். அவர்கள் மேல் சிறப்பு கவனம் செலுத்த முடிவு செய்தேன்” என்று அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
உள்ளூர் எம்எல்ஏ சமீர் போட்டர் கூறுகையில்,
“பள்ளிப் படிப்பை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தவர்கள், தங்களுடைய குடும்பத்தினரிடமிருந்து ஊக்கத்தை பெறலாம். கல்வி கற்க விருப்பமுடையவர்களுக்கு உதவி செய்ய நாங்கள் தயாராக உள்ளோம்” என்றார்.
“அரசு சபுஜ் சத்தி திட்டத்தின்படி, பள்ளியிலிருந்து எங்களுக்கு மிதிவண்டி தரப்பட்டுள்ளது. ஒரு வாரத்தின் நான்கு நாட்கள் நாங்கள் மூவரும் பள்ளிக்குச் செல்வோம். பலர் எங்களைக் கண்டு எள்ளி நகையாடினர். ஆனால் நாங்கள் கவலைப்படவில்லை” என்றார் கல்யாணி.
“எனக்குப் படித்த உறவினர் பலர் உள்ளனர். சிலர் கல்லூரி பேராசியர்களாக இருக்கின்றனர். எங்களுக்குச் சரியான படிப்பில்லாததால் எங்களைத் தவிர்த்து வருகின்றனர். அவர்கள் எங்களுடன் எந்த தொடர்பு வைத்துக்கொள்ள விரும்பவில்லை. எங்களுடைய திறனை அவர்களுக்கு காட்ட வேண்டும்” என்று பல்ராம் கூறினார்.