March 11, 2017 தண்டோரா குழு
“உத்தரப் பிரதேச மக்களின் முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்” என்று சமாஜ்வாதி கட்சி தலைவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
“உத்தரப் பிரதேச மக்களின் தேர்தல் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்காக உழைத்த தொண்டர்களுக்கு நன்றி.
கடந்த சட்டப் பேரவை தேர்தலில் என் திறமையை நிரூபிக்க 5 ஆண்டுகள் வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி. உத்தரப் பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்காக நாங்கள் கடுமையாக உழைத்தோம்.
தேர்தலின் போது ஓட்டுப் பதிவு இயந்திரம் சேதப்படுத்தியது குறித்து கேள்வி எழுப்பினால், அது குறித்து ஆளும் அரசு விசாரணை நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
புதிதாக பொறுப்பேற்க உள்ள அரசு மக்களின் வளர்ச்சிக்கு சமாஜ்வாதி அரசை விட கடுமையாக உழைக்க வேண்டும். மக்களிடம் தவறான தகவல்களை பா.ஜ.க. தந்து வாக்குப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி எங்களுக்கு பலனை அளித்துள்ளது”
இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறினார்.