July 19, 2017 தண்டோரா குழு
மக்களைப் போராடத் தூண்டினால் குண்டர் சட்டம் பாயும்என முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகத் துண்டு பிரசுரம் வழங்கியதுக்காக மாணவி வளர்மதி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். பின்னர், அவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், மாணவி மீது குண்டர் சட்டம் போடப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் சட்டபேரவையில் கேள்வி எழுப்பினர். அப்போது இதற்கு விளக்கமளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி,
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி செய்ததாலும் வளர்மதி கைது செய்யப்பட்டார்.
2014-ம் ஆண்டு கல்லூரிக் கட்டணத்தைக் குறைக்கக்கோரிஅண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளை வளர்மதி போராட்டத்துக்குத் தூண்டினார். அதுதொடர்பாக அவர் மீது இரண்டு வழக்குகள் உள்ளன.
கடந்த மார்ச் மாதம் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீசப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.அவரை விடுவிக்கக்கோரி வளர்மதி சாலை மறியலில் ஈடுபட்டார். அதுதொடர்பாகவும் அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்றார்.
மேலும், மக்களை தூண்டிவிட்டு கிளர்ச்சியை ஏற்படுத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். மக்களை போராட தூண்டுவர்கள், மாணவ மாணவியர்களை அழைத்து போராட வைப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயம். மாணவர்கள் போராடினால் அவர்கள் படிப்பு கெடும் என எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.