October 5, 2021 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி வடக்கு மண்டல பகுதிகளில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட கணபதி பகுதியிலுள்ள காந்தி மாநகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், துடியலூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறும் கர்ப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் போன்றவை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறும் நபர்களின் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, மருந்து மாத்திரைகள் வழங்கப்படும் முறைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ்குமார், வடக்கு மண்டல உதவி கமிஷனர் மோகனசுந்தரி உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.