January 7, 2017 தண்டோரா குழு
பத்து ரூபாய் நாணயங்களில் உள்ள மாற்றங்களை வைத்து, செல்லாது என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. மக்கள் குழப்பமடைய வேண்டாம் என இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை கேட்டுக் கொண்டுள்ளது.
பழைய ரூ 500,1000 செல்லாது என நவம்பர் 8 ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அதன் பின் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இதை உண்மை என நம்பி, வியாபாரிகளும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே பத்து ருபாய் நாணயம் செல்லும். மக்கள் குழப்பமடைய வேண்டாம் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது:
பத்து ரூபாய் நாணயம் 2009ல் அறிமுகம் ஆனது. அவ்வப்போது, சில மாற்றங்களுடன், அதிகாரபூர்வமாக வெளியிடப்படுகிறது. நாணயங்களில் உள்ள மாற்றங்களை வைத்து, செல்லாது என்று தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. இதுவரை, போலி நாணயங்கள் எதையும் கண்டறியவில்லை.
இந்த நாணயங்கள், இரு உலோகத்தால், வட்ட வடிவில் உருவாக்கப்பட்டவை. 27 மி.மீ., விட்டம், 7.71 கிராம் எடை உடையவை. 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை. அவை அனைத்தும் செல்லும். பொதுமக்கள் குழப்பமடைய வேண்டாம்.
இவ்வாறு இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.