May 13, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுகர்வோர் அமைப்புகள் உடனான முதல் காலாண்டு கூட்டம் ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மாவட்ட வழங்கல் அலுவலர், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். நுகர்வோர் அமைப்புகள் சார்பில் கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் நா.லோகு, இந்திராணி, தேவபாலன், ஜெயராமன், வெங்கடேசன் உள்ளிட்ட பல்வேறு நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் நா. லோகு பேசுகையில்,
‘‘கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் தோறும் அளிக்கப்படும் மனுக்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், மனுதாரர்களுக்கு பதில் தெரியாமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர்.
பல ஊராட்சிகளில் உள்ள மேல்நிலைதொட்டி முறையாக பராமரிக்கப்படாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் செல்லாமல் பெரும்பாலான தனியார் பேருந்துகள் பாதி வழியிலேயே பயணிகளை இறக்கி விடுகின்றனர். இவர்கள் மீது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. ஆகவே அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் செல்லாத பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்’’ என்றார்.
நுகர்வோர் அமைப்புகள் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்தார்.