August 7, 2017 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று அரசு மணல் குவாரி வாகனங்களின் ஆவணங்கள் சரிபார்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தொடங்கி வைத்தார்.
பின்னர் இது குறித்து அவர் கூறும்போது,
“தமிழக அரசின் மணல் இணைய சேவையில் மேற்கொள்ளப்படும் வாகனப் பதிவுகளில் எழும் முறைகேடான பதிவுகளை தவிர்க்கும் பொருட்டு வாகன ஆவணங்களை சரிபார்த்தலுக்கான சிறப்பு முகாம் இன்று முதல் வரும் 11 –ம் தேதி வரை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால் நடத்தப்படவுள்ளது.
வாகன உரிமையாளர்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுளள படிவத்தில் தங்கள் வாகனத்தில் நடப்பில் உள்ள வாகன பதிவு புத்தகம்,வாகன அனுமதிச் சான்று, வாகன தகுதிச் சான்று, சாலை வரி, ரசீது மற்றும் காப்பீட்டு விவரங்கள் ஆகியவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்து இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யும் படிவத்துடன் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
இம்முகாமிற்கு வாகனங்களை கொண்டு வரவேண்டாம். முகாமில் வாகனங்கள் சரிபார்க்கும் வாகனங்கள் மட்டுமே இணையதள மணல் சேவையினை பயன்படுத்திக்கொள்ளமுடியும்.
மேலும் தவறான ஆவணங்கள் கொண்ட வாகனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என்றார்.