December 5, 2022 தண்டோரா குழு
உலக மண் தினத்தை முன்னிட்டு ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் மண் வளப் பாதுகாப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று (டிசம்பர் 5) நடைபெற்றன.
வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ரகுநாதன் தலைமை தாங்கினார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,“மண் வளம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதனால், விவசாயிகளின் விளைச்சலும் குறைந்து கொண்டே வருகிறது. இழந்த மண் வளத்தை மீட்டெடுக்காவிட்டால் எதிர்கால தலைமுறையினர் பல்வேறு பாதிப்புகளை சந்திப்பார்கள்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கல்லூரியின் துணை முதல்வர் . ராஜஸ்ரீ, சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் கோபி, ஜெயராஜ் ஆகியோரும் உடன் பங்கேற்றனர்.
இதேபோல், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, கபாலீஸ்வரர் கோவில், தில்லைநகர் சப் வே, ஆவடி பஸ் டிப்போ, மீனாட்சி கல்லூரி, வளசரவாக்கம் சிவன் பார்க், பெரம்பூர் பஸ் நிறுத்தம், மாதவரம் ரவுண்டானா உட்பட சுமார் 20 இடங்களில் ‘மண் காப்போம்’ இயக்கத்தின் தன்னார்வலர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். வாகன ஓட்டுநர்களுக்கு ‘மண் காப்போம்’ என்ற ஸ்டிக்கர்களை விநியோகித்து இவ்வியக்கத்தின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தனர்.
அனைத்து விவசாய நிலங்களிலும் குறைந்தப்பட்சம் 3 முதல் 6 சதவீதம் கரிம சத்து இருக்க வேண்டும். அதற்காக செயல் செய்யும் விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்க தொகை வழங்க வேண்டும். மர விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு கார்பன் கிரெடிட் என்ற பெயரில் மானியம் வழங்க வேண்டும். 3 சதவீதற்கும் மேல் கரிம சத்து கொண்ட மண்ணில் விளையும் விளைப் பொருட்களுக்கு கூடுதல் விலை வழங்க வேண்டும் என்பது இவ்வியக்கத்தின் பிரதான பரிந்துரைகள் ஆகும்.
மண் வளப் பாதுகாப்பு குறித்த சட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்க வலியுறுத்தி சத்குரு அவர்கள் மண் காப்போம் இயக்கத்தை இந்தாண்டு தொடங்கினார். இதற்காக அவர் மார்ச் 21-ம் தேதி முதல் 100 நாட்களில் 27 நாடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் சவாலான பயணம் மேற்கொண்டு உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதன் விளைவாக, 74 நாடுகள், 11 இந்திய மாநிலங்கள், 9 ஐ.நா அமைப்புகள் இவ்வியக்கத்திற்கு ஆதரவு அளித்தன. மேலும், இதுவரை 391 கோடி மக்களும் இவ்வியக்கத்திற்காக குரல் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், உலக மண் தினமான இன்று (டிச.5) தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இவ்வியக்கத்தின் தன்னார்வலர்கள் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.