November 5, 2021 தண்டோரா குழு
கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்திபன் (31), முருகானந்தம் (55), சக்திவேல் (61). பார்த்திபனும், சக்திவேலும் பெயிண்டர்கள். தென்காசியை சேர்ந்த முருகானந்தம் சமையலராக வேலை பார்த்தார். நண்பர்களான மூவரும் தீபாவளியையொட்டி கடந்த 3ம் தேதி இரவு நீண்ட நேரம் மது அருந்தியுள்ளனர்.நேற்று காலை 6 மணி அளவில் 3 பேரும் மீண்டும் ஒரு முழு பாட்டில் மதுவை பிளாக்கில் வாங்கியுள்ளனர்.
அருந்ததியர் வீதி அருகில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் அமர்ந்து 3 பேரும் மது அருந்தினர். பின்னர் சக்திவேல் அந்த கட்டிடத்தின் அருகில் அமர்ந்திருந்த நிலையிலும், முருகானந்தம் பாரதியார் சாலையிலும் மயங்கி விழுந்தனர். இருவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்து விட்டதை உறுதி செய்தனர். இவர்களுடன் மது அருந்திய பார்த்திபனை உறவினர்கள் தேடியபோது அவர் வீட்டில் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.
இதனையடுத்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பார்த்திபன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில் பாதி அருந்திய நிலையில் கைப்பற்றப்பட்ட மதுபான பாட்டிலை கைப்பற்றிய போலீசார் அந்த மதுபானத்தை பரிசோதனைக்காக அனுப்பியுள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 3 பேரும் மது அருந்திய இடத்தில் இருந்த பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவற்றையும் தடய அறிவியல் துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில், உயிரிழந்த 3 பேரும் போதைக்காக மதுபானத்தில் ‘தின்னர்’ கலந்து குடித்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் குடித்த மதுபானம் 2018ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அது குறித்தும் விசாரணை நடக்கறிது. இதனிடையே 3 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் அறிக்கை இன்னும் ஒரிரு நாட்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 3 பேரும் அருந்திய மதுபான வகைகளை மட்டும் தற்காலிகமாக விற்காமல் நிறுத்தி வைக்க டாஸ்மாக் கடைகளுக்கு கோவை டாஸ்மாக் உயர் அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.