December 28, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி பகுதியில் சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது.
இதையடுத்து மாநகராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய மண்டலம் மாநகராட்சி உதவி கமிஷனர் மகஷே் தலைமையில் உதவி நகர திட்டமைப்பு அலுவலர் பாபு மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சிவானந்தா காலனி, ரத்தினபுரி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் சாலையோரம் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 3 பெட்டிக்கடைகள், அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த ஆவின் கடை உள்ளிட்டவை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.