December 3, 2022 தண்டோரா குழு
மத்திய ரயில்வே துறையை கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்திய ரயில்வே துறை தமிழகத்தை புறக்கணித்து வருவதாகவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கோவை ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்திய ரயில்வே துறை தமிழகத்தை புறக்கணிப்பதாகவும் குறிப்பாக கோவை திருப்பூர் மாவட்டங்களை புறக்கணிப்பதாகவும், காசி தமிழ் சங்கமத்திற்கு இலவச ரயில் சேவை வழங்கும் மத்திய அரசு இங்குள்ள மாவட்டங்களையும் கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர். மேலும் கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ரயில்களை இயக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மதிமுக, காங்கிரஸ், sdpi, விடுதலை சிறுத்தைகள், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், மே17 இயக்கம், தமிழ்நாடு வணிகர் பேரவை, சிபிஎம், மனிதநேய மக்கள் கட்சி உட்பட பல்வேறு அமைப்புகளை சார்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இந்திய ரயில்வே துறையை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன் இந்திய ரயில்வே துறை மோடி ஆட்சியில் தமிழகத்தை முற்றிலுமாக புறக்கணித்து வருவதாகவும், குறிப்பாக கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களை புறக்கணித்து வருவதாக தெரிவித்தார். தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த ரயில்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டிருப்பதாக கூறினார்.
அந்த ரயில்களை மீண்டும் இயக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் நிலையங்களை சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டுமென வலியுறுத்தினார். மேட்டுப்பாளையம் முதல் பொள்ளாச்சிக்கு மெமோ ரயில் இயக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
மேலும் அனைத்து ரயில்களையும் சிங்காநல்லூர் இருகூர் ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தி செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.